இச்சியாதிருக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது
பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார். (யாத்திராகமம் 20:17)
மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21)
அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடி, அவைகளில் இருக்கிற வெள்ளியையும், பொன்னையும் ஆசைப்படாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். (உபாகமம் 7:25)
இச்சிப்பதற்குத் தண்டனை எச்சரிக்கப்பட்டுள்ளது
சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள். (யோசுவா 6:18)
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி, வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ, ஆகையால் யெகோவா: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாகத் தீமையை வரச்செய்ய நினைக்கிறேன்; அதிலிருந்து நீங்கள் தப்பமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாக நடப்பதில்லை; அது தீமையான காலம். (மீகா 2:1-3)
இச்சித்ததற்கான தண்டனைக்கு உதாரணம்
இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே. ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன். எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது யெகோவா குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார். யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான். அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான். அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 550 கிராம் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது. அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் வைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று யெகோவா உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; (யோசுவா 7:11-25)
நமக்குப் போதிக்கக் கொடுக்கப்பட்ட இச்சையின் உதாரணங்கள்
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 10:6)
பொருளாசைக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும், திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (1 கொரிந்தியர் 6:9-10)
பொருளாசைக்காரன் விக்கிரக ஆராதனைக்காரன்
மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. (எபேசியர் 5:3)
விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபேசியர் 5:5)
பொருளாசையுள்ள விசுவாசியோடு கலந்திருக்க வேண்டாம்
விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. (1 கொரிந்தியர் 5:9-11)
இச்சியாத தேவபக்தியுள்ளவருக்கு உதாரணம்
ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. (அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33)
தேவனால் இச்சையைக் கட்டுப்படுத்த முடியும்
வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும். நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை. (யாத்திராகமம் 34:23-24)
நியாயப்பிரமாணத்தின் செயல்பாட்டை விளக்க இச்சை உவமையாகப் பயன்படுத்தப்பட்டது
எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே. பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே. (ரோமர் 7:7-8)