வரி செலுத்தக் கட்டளையிடப்பட்டுள்ளது
எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே. எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள். (ரோமர் 13:5-7)
வரி செலுத்துவதை இயேசு அங்கீகரித்தார்
ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (மத்தேயு 22:17-21)
அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள். அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மாற்கு 12:14-17)
இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (லூக்கா 20:22-25)
செலுத்தப்பட்ட வரிகளுக்கு உதாரணங்கள்
மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான். (2 இராஜாக்கள் 3:4)
இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவிற்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் சுமத்தினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான். (2 இராஜாக்கள் 15:20)
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி, அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து மக்களின் கையிலே சுமத்தினான். (2 இராஜாக்கள் 23:33, 35)
தேவனுடைய ஆலயத்தை யூத மூப்பர்கள் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யத்தக்கதாக, நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதர்களுக்குத் தடை ஏற்படாமலிருக்க, நதிக்கு மறுபுறத்தில் வாங்கப்படும் வரியை ராஜாவின் பணத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும். (எஸ்றா 6:8)
விசேஷ வெகுமதி – வரி செலுத்த வேண்டியதில்லை
அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள். (1 சாமுவேல் 17:25)
லேவியரிடமிருந்து வரியோ கப்பமோ கேட்கப்படவில்லை
பின்னும் ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும், வாசல் காவலாளர்களும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் எந்தவொரு வரியையும் சுமத்தக்கூடாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். (எஸ்றா 7:24)
இடறல் உண்டாகாதபடி இயேசு தேவாலய வரி செலுத்தினார்
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே. ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார். (மத்தேயு 17:24-27)
செலுத்தப்பட்ட கப்பத்துக்கு உதாரணங்கள்
நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள். (1 இராஜாக்கள் 4:21)
யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருட ஆட்சியில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை. அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனுக்குக் கீழிருந்து, அவனுக்கு வரி செலுத்தினான். (2 இராஜாக்கள் 17:1-3)
ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது. (2 நாளாகமம் 17:5)
இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். (2 நாளாகமம் 17:12)
அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள். (2 நாளாகமம் 27:5)
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி, (2 நாளாகமம் 36:3)
எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், அனைத்து வரியும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது. (எஸ்றா 4:20)
கப்பம் செலுத்தாததால் வந்த அச்சுறுத்தல்
இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், அவர்கள் எந்தவொரு வரியையும் கொடுக்கமாட்டார்கள்; அதனால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக. (எஸ்றா 4:13)