கர்த்தர் பட்சபாதமுள்ளவரல்ல
உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. (உபாகமம் 10:17)
ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான். (2 நாளாகமம் 19:7)
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. (யோபு 34:19)
எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள். (எபேசியர் 6:9)
நாம் பட்சபாதம் காட்டக்கூடாது
பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான். (நீதிமொழிகள் 28:21)
பட்சபாதம் காட்டுவது பாவம்
உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். (யாக்கோபு 2:8-9)
செல்வந்தருக்குப் பட்சபாதம் காட்டாதே
என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள். ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது, அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். (யாக்கோபு 2:1-9)
ஏழைகளுக்குப் பட்சபாதம் காட்டாதே
வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே. (யாத்திராகமம் 23:3)
“நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. (லேவியராகமம் 19:15)
தலைவர்களும் நியாயாதிபதிகளும் பட்சபாதம் காட்டக்கூடாது
நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி, (உபாகமம் 1:17)
“உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். (உபாகமம் 16:18-19)
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, யெகோவாவுடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார். ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான். (2 நாளாகமம் 19:6-7)
பட்சபாதம் காட்டினால் சாபம்
நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன். (மல்கியா 2:9)
சரியான மனப்பான்மைகள்
ஒருவரோடொருவர் ஒரே சிந்தையுள்ளவர்களாயிருங்கள்
ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம். (ரோமர் 12:16)
மற்றவர்களை உங்களைவிட மேன்மையானவர்களாக எண்ணுங்கள்
ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும். (பிலிப்பியர் 2:3)