ஐசுவரியம்

வேதாகமம் உடைமைகள் குறித்துச் சமநிலையான கண்ணோட்டத்தைத் தருகிறது: தேவன் செல்வத்தால் ஆசீர்வதிக்க முடியும்; ஆனால் அதன் ஆபத்துகளுக்கு எதிராக எச்சரித்து, உண்மையான ஐசுவரியம் அவரோடுள்ள உறவில் இருக்கிறது என்று வலியுறுத்துகிறது. உடைமைகள் தற்காலிகமானவை, இரட்சிப்பை வாங்க முடியாதவை, பெருமை, பிரிவு, ஆவிக்குரிய கனியற்ற நிலை ஆகியவற்றுக்கு வழிநடத்தக்கூடியவை.

உடைமைகள் குறித்த வேதாகமக் கண்ணோட்டம்

ஐசுவரியம் குறித்த கர்த்தருடைய கண்ணோட்டம்

உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 2:9)

உடைமைகள் குறித்த மனிதரின் கண்ணோட்டம்

பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். (யோபு 5:5)
அவன் செல்வந்தனாவதுமில்லை, அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. (யோபு 15:29)
அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். (யோபு 20:10)
அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். (யோபு 20:15)
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான். அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும், தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும், அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. (யோபு 20:18-20)
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான். (யோபு 20:26)
வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும். (யோபு 20:28)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (யோபு 21:13)
ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. (யோபு 21:16)
நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். (யோபு 22:23-25)
பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், (யோபு 27:13)
அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். (யோபு 27:16-17)
அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். (யோபு 36:11)
உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. (யோபு 36:19)
பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; இதினாலே பலனுமுண்டு. ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; இதுவே அறிவின் மேன்மை. (பிரசங்கி 7:11-12)

நாம் மரிக்கும்போது ஒன்றையும் எடுத்துச் செல்வதில்லை

ஒருவன் செல்வந்தனாகி, அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். (சங்கீதங்கள் 49:16-20)
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை. தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. (பிரசங்கி 5:13-15)
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். (1 தீமோத்தேயு 6:7)
நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். (சங்கீதங்கள் 39:6)

உன் ஆத்துமாவின் மீட்பைப் பணம் கொடுத்து வாங்க முடியாது

என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. (சங்கீதங்கள் 49:5-8)
கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 11:4)
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26)
மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? (மாற்கு 8:36-37)
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்கா 9:25)

ஐசுவரியம் அநேக “நண்பர்களை” உண்டாக்குகிறது

தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. (நீதிமொழிகள் 14:20)
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். (நீதிமொழிகள் 19:4)

செல்வம் நிலையற்றது

செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும். (நீதிமொழிகள் 23:4-5)
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். (எபிரெயர் 11:24-26)
அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். (1 பேதுரு 1:7)
உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல், (1 பேதுரு 1:18)

இயேசுவை அறிவதோடு ஒப்பிடும்போது எல்லா உடைமைகளும் ஒன்றுமில்லை

ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன். அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். (பிலிப்பியர் 3:7-8)

ஐசுவரியம் நிச்சயமற்றது

இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (1 தீமோத்தேயு 6:17)

கர்த்தரில்லாமல் ஐசுவரியம் பயனற்றது

நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன். மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன். வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது. வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித சம்பாதித்தேன். எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட நான் பெரியவனும் செல்வம் நிறைந்தவனுமானேன்; என்னுடைய ஞானமும் என்னோடுகூட இருந்தது. என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. (பிரசங்கி 2:4-11)

ஐசுவரியத்தைவிட மதிப்புள்ளவை

அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. (யோபு 28:15-19)
அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. (சங்கீதங்கள் 37:16)
திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். (சங்கீதங்கள் 119:14)
அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட். (சங்கீதங்கள் 119:72)
ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். (சங்கீதங்கள் 119:127)
ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. (நீதிமொழிகள் 3:13-16)
வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. (நீதிமொழிகள் 8:10-11)
செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். (நீதிமொழிகள் 8:18-21)
சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். (நீதிமொழிகள் 15:16)
அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. (நீதிமொழிகள் 16:8)
பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை (நீதிமொழிகள் 16:16)
அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். (நீதிமொழிகள் 16:19)
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். (நீதிமொழிகள் 19:1)
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். (நீதிமொழிகள் 20:15)
திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம். (நீதிமொழிகள் 22:1)
இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். (நீதிமொழிகள் 28:6)

அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்

அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள். (லூக்கா 12:48)

செல்வத்தின் ஆசீர்வாதங்கள்

நீதிமான்களுக்குச் செழிப்பு பலனாகக் கிடைக்கும்

பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். (நீதிமொழிகள் 13:21)
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. (நீதிமொழிகள் 15:6)

தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பவனுக்குச் செல்வம்

துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். (சங்கீதங்கள் 1:1-3)

செழிப்புள்ளவர்கள் கர்த்தரை ஆராதிப்பார்கள்

பூமியின் செல்வந்தர் அனைவரும் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. (சங்கீதங்கள் 22:29)

செழிப்புக்காக ஜெபித்தல்

உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். (சங்கீதங்கள் 106:5)
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். (சங்கீதங்கள் 122:6-7)
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். (சங்கீதங்கள் 128:5)
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன். (3 யோவான் 2)

தேவபக்தியுள்ள செல்வந்தர்கள்

ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய மகனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும், ஆரானிலே வாங்கியிருந்த மக்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தைச் சென்றடைந்தார்கள். (ஆதியாகமம் 12:5)
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான். (ஆதியாகமம் 13:2)
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும். இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள். (ஆதியாகமம் 15:13-14)
ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானான். யெகோவா ஆபிரகாமை அனைத்துக் காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். (ஆதியாகமம் 24:1)
அந்தப் பெண் மிகுந்த அழகுள்ளவளும், கன்னிகையுமாக இருந்தாள்; அவள் கிணற்றில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். (ஆதியாகமம் 24:16)
யெகோவா என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; யெகோவா அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். (ஆதியாகமம் 24:35)
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்; அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு, (ஆதியாகமம் 26:12-14)
இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான். (ஆதியாகமம் 30:43)
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். (ஆதியாகமம் 33:11)
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து, (ஆதியாகமம் 41:42)
எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி; (ஆதியாகமம் 45:13)
தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவனுடைய சந்ததியினர் அனைவரும் எகிப்திற்குப் போனார்கள். (ஆதியாகமம் 46:6)
இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள். (ஆதியாகமம் 47:27)
நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான். (யோசுவா 22:8)
நகோமிக்கு அவளுடைய கணவனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பெயருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். (ரூத் 2:1)
இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். (2 சாமுவேல் 1:24)
சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும், நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது. (1 இராஜாக்கள் 10:4, 7)
ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால், உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை. இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை. (1 இராஜாக்கள் 3:11-13)
அப்படியே சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே யெகோவாவுடைய சிங்காசனத்தில் ராஜாவாக அமர்ந்திருந்து பாக்கியசாலியாக இருந்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். (1 நாளாகமம் 29:23)
அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாக, நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்பு, அவனுடைய மகனாகிய சாலொமோன் அவனுடைய இடத்திலே ஆட்சிசெய்தான். (1 நாளாகமம் 29:28)
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார். (2 நாளாகமம் 1:11-12)
பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். (2 நாளாகமம் 9:22)
ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது. (2 நாளாகமம் 17:5)
பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். (2 நாளாகமம் 17:11-12)
யோசபாத்திற்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் இருந்தது; அவன் ஆகாபோடு சம்பந்தம் கலந்து, (2 நாளாகமம் 18:1)
எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும், தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சைரசமும் எண்ணெயும் வைக்கும்படியான சேமிப்பு அறைகளையும், அனைத்துவிதமான மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான். அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டி ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான செல்வத்தைக் கொடுத்தார். இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து கீழே தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது. (2 நாளாகமம் 32:27-30)
அவர்கள் பாதுகாப்பான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, எல்லாவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், ஏராளமான திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் மரங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயவினால் செல்வச்செழிப்பாக வாழ்ந்தார்கள். (நெகேமியா 9:25)
அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். (யோபு 1:3)
பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான். (தானியேல் 3:30)
மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, (மத்தேயு 27:57)
இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாக இருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாக இருக்கும்; அப்பொழுது உங்களோடுகூட நாங்களும் ஆளுவோமே. இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். (1 கொரிந்தியர் 4:8, 11-12)
என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது. மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். (பிலிப்பியர் 4:11-18)

தம் ஊழியக்காரரின் செழிப்பில் கர்த்தர் பிரியப்படுகிறார்

என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும். (சங்கீதங்கள் 35:27)

எல்லாரும் செழிப்பதில்லை

வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள். இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள். நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார். (எபிரெயர் 11:36-40)

ஐசுவரியத்தைப் பெற இயேசு பாத்திரர்

அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 5:12)

ஞானிகள் செல்வந்தர்களாகலாம்

ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. (நீதிமொழிகள் 14:24)

செல்வம் எவ்வாறு பெறப்படுகிறது

வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். (நீதிமொழிகள் 24:3-4)

மனிதர் செல்வம் பெறுவதைத் தடுக்கும் காரியங்கள்

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. (நீதிமொழிகள் 21:17)
தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான். (நீதிமொழிகள் 22:16)

செல்வத்தின் ஆபத்துகள்

செல்வத்தை நேசித்தல்

கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். (சங்கீதங்கள் 62:10)

பெருமை

நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய். உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது. (எசேக்கியேல் 28:4-5)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (1 தீமோத்தேயு 6:17)

வாழ்க்கை குறுகியது என்பதால் செல்வந்தர் பெருமைப்படக்கூடாது

ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான். (யாக்கோபு 1:9-11)

ஐசுவரியத்தில் அல்ல, கர்த்தரில் மேன்மைபாராட்டுங்கள்

ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். (எரேமியா 9:23-24)

ஐசுவரியம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது

செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். (நீதிமொழிகள் 10:15)
செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். (நீதிமொழிகள் 18:11)
நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். யெகோவாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; (சங்கீதங்கள் 30:6-7)

ஐசுவரியத்தை நம்புகிறவர்கள்

ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். (சங்கீதங்கள் 49:10-12)

செல்வம் மனிதரைப் பிரிக்கும் தன்மையுடையது

ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான். அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். (ஆதியாகமம் 13:5-11)
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்; அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு, அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள். அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: “நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய்” என்றான். (ஆதியாகமம் 26:12-16)
ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான். அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது. (ஆதியாகமம் 36:6-7)
தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகும்வரை, வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ, (ஏசாயா 5:8)

ஐசுவரியம் கிறிஸ்தவர்களைப் பிரிக்கலாம்

முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான். இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே. சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன். (1 கொரிந்தியர் 11:18-22)

ஐசுவரியம் வஞ்சகமானது / கனியை நெருக்கிப்போடலாம்

துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். (நீதிமொழிகள் 11:18)
அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன. சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (மத்தேயு 13:4-5, 7, 22)
அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான். சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது. வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். (மாற்கு 4:2-3, 7, 18-19)
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள். (லூக்கா 8:7, 14)

செல்வந்தன் ராஜ்யத்தில் பிரவேசிப்பது கடினம்

அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார். அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். (மத்தேயு 19:16-26)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை. விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். (மாற்கு 10:17-27)
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 18:28-30)

கர்த்தரை அறியாத செல்வந்தர்கள் நித்தியமாக அவரைவிட்டுப் பிரிக்கப்படுவார்கள்

செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று. பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். (லூக்கா 16:19-25)

செல்வந்தர் தங்களை ஞானிகளாக எண்ணுகிறார்கள்

செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். (நீதிமொழிகள் 28:11)

செல்வந்தர் ஏழைகளை நடத்தும் விதம்

தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். (நீதிமொழிகள் 18:23)
செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. (நீதிமொழிகள் 22:7)
நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? (யாக்கோபு 2:6-7)

செல்வம் கர்த்தரை மறக்கச் செய்யலாம்

“உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு. (உபாகமம் 6:10-12)
அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம். ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக. “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும், உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும், உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும், என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். (உபாகமம் 8:9-18)
நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி, அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள். (உபாகமம் 31:20)
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். (நீதிமொழிகள் 30:7-9)
நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்போது நான் உனக்குச் சொன்னேன், நீ கேட்கமாட்டேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். உன் மேய்ப்பர்கள் எல்லோரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்புக்காகவும் நீ வெட்கப்பட்டு அவமானமடைவாய். (எரேமியா 22:21-22)
நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 3:17-18)

செல்வம் பொறாமையை உண்டாக்குகிறது

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்; அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு, (ஆதியாகமம் 26:12-14)
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: “நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய்” என்றான். (ஆதியாகமம் 26:16)
பின்பு, லாபானுடைய மகன்கள்: “எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்” என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். (ஆதியாகமம் 31:1)

செல்வத்தின் சாபங்கள்

கடத்தப்படுதலின் சாபம்

மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். (நீதிமொழிகள் 13:8)

தூக்கமின்மையின் சாபம்

வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது. (பிரசங்கி 5:12)

செல்வந்தருக்கு ஐயோ

செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். (லூக்கா 6:24)
செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது. உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது. பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள். (யாக்கோபு 5:1-5)

துன்மார்க்கர் ஏன் செழிக்கிறார்கள்?

துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான். துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான். (சங்கீதங்கள் 10:3-5)
தாவீதின் பாடல். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். (சங்கீதங்கள் 37:1-2, 7, 9-11)
ஆசாபின் பாடல். சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது. மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள். ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள். தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும். தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள். இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழச்செய்கிறீர். அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர். (சங்கீதங்கள் 73:1-20)
நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். (நீதிமொழிகள் 11:16)
யெகோவாவே, உம்முடன் நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்முடன் நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகம் செய்துவருகிற அனைவரும் சுகமாக இருக்கிறதென்ன? நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர். (எரேமியா 12:1-2)

தேவபக்தியற்ற செல்வந்தர்

மாகோனிலே ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனிதன் பெரும் செல்வந்தனாக இருந்தான்; அவனுக்கு 3,000 ஆடும், 1,000 வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். (1 சாமுவேல் 25:2)
அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான். (எஸ்தர் 1:4)
தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். (எஸ்தர் 5:11)
அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை. (ஏசாயா 2:7)
உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய். (எசேக்கியேல் 27:33)
இப்போது நான் உண்மையான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதற்குப்பின்பு நான்காம் ராஜாவாயிருப்பவன் எல்லோரிலும் மிக செல்வச்செழிப்புள்ளவனாகி, அதனால் அவன் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்ஜியத்திற்கு விரோதமாக எல்லோரையும் எழுப்பிவிடுவான். (தானியேல் 11:2)
வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன், (லூக்கா 19:2)

சிலருடைய செழிப்பைத் தேட வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டுள்ளது

நீ உயிருள்ளவரை அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே. (உபாகமம் 23:6)
ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே. (எஸ்றா 9:12)

செழிப்பதற்குத் தவறான வழி

சிலர் பாவத்தை அறிக்கையிடாமல் பாவம் செய்து செழிக்கிறார்கள்

எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். (ஓசியா 12:8)
அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று நினைக்கிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் ஆனோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை. (சகரியா 11:5)

செழிப்பதற்காகச் சிலர் பக்திமான்கள்போல் நடிக்கிறார்கள்

அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான். (நியாயாதிபதிகள் 17:13)

பலவகை

அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், (நீதிமொழிகள் 2:4)
ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும். (பிரசங்கி 10:20)

சில நேரங்களில் மனிதர் தங்கள் பொருளாதார நிலை குறித்து ஏமாற்றுகிறார்கள்

ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. (நீதிமொழிகள் 13:7)

தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்பை விளக்கப் பணம் பயன்படுத்தப்பட்டது

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். (மத்தேயு 13:44-46)

நீதியான வாழ்க்கை வெள்ளிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. (நீதிமொழிகள் 10:20)

செல்வமும் தேவபக்தியின்மையுமுள்ள தேசங்கள்மேல் நியாயத்தீர்ப்பு

ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள். (ஏசாயா 15:7)
திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது. (எரேமியா 51:13)
கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய். எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள். யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள். தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள். சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள். யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள். தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள். இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள். ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள். இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள். உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய். துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது. நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள். (எசேக்கியேல் 27:3, 12-27)
இஸ்ரவேல் பலனற்ற திராட்சைச்செடி, அது தனக்குத்தானே பழங்களைக் கொடுக்கிறது; அவன் தன் பழங்களின் பெருக்கத்திற்குச் சரியாகப் பலிபீடங்களை அதிகமாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்பிற்குச் சரியாகச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள். ஏமாற்றுகிற இருதயம் அவர்களுக்கு இருக்கிறது; இப்போதும் குற்றம் சுமத்தப்படுவார்கள்; அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய சிலைகளை நாசமாக்குவார். (ஓசியா 10:1-2)
மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள். அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களைத் தப்புவிக்காது; அவருடைய எரிச்சலின் நெருப்பினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிமக்களையெல்லாம் விரைவாக அழிப்பார். (செப்பனியா 1:11, 13, 18)
தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும். (சகரியா 9:3-4)

ராஜா மிகுந்த செல்வந்தனாகக் கூடாது

அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம். (உபாகமம் 17:16-17)

மிகுந்த செல்வந்தராகக் கூடாது என்ற கட்டளையை ராஜாக்கள் மீறினார்கள்

சாலொமோனுக்கு 4,000 குதிரைலாயங்களும், 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். (1 இராஜாக்கள் 4:26)
சாலொமோனுக்கு வியாபாரிகளும், நறுமணப்பொருட்களின் மொத்த வியாபாரிகளும், அரபிதேசத்து எல்லா ராஜாக்களும், மாகாணங்களின் அதிபதிகளும் கொண்டு வந்த பொன்னைத்தவிர, ஒவ்வொரு வருடத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாக இருந்தது. சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது. அடித்த பொன்தகட்டால் 300 கேடகங்களையும் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் நிறுவை பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான். அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது. ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை. ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை. ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். பூமியின் எல்லா ராஜாக்களையும்விட, ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்தான். சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்காக, எல்லா தேசத்தை சேர்ந்தவர்களும் அவனுடைய முகத்தின் தரிசனத்தைத் தேடினார்கள். ஒவ்வொரு வருடமும் அவரவர் தங்களுடைய காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப்பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு 1,400 இரதங்கள் இருந்தது, 12,000 குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான். எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள். (1 இராஜாக்கள் 10:14-28)
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான். சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள். அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன. (2 நாளாகமம் 1:14-17)
உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள். அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை. ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள். அந்த வாசனை மரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், இசைக்கலைஞர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை. சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள். சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது. அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள். ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான். அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் எடை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான். அந்தச் சிங்காசனத்திற்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதப்படியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கை சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கை சாய்மானங்கள் அருகே நின்றன. அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை. ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை. ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள். வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான். நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான். எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான். (2 நாளாகமம் 9:8-27)

தீர்க்கதரிசனம்

தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள். (சங்கீதங்கள் 45:12)
எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரண்மனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை. அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான். அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தையைக் கேளும். இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் அனைத்தும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். (ஏசாயா 39:2, 4-6)
அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும். ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள். தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும். உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும். (ஏசாயா 60:5-6, 9, 11)
நீங்களோ யெகோவாவின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய ஊழியக்காரர் என்பார்கள்; நீங்கள் தேசங்களின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள். உங்களுடைய வெட்கத்திற்குப் பதிலாக இரண்டு மடங்கு பலன் வரும்; அவமானத்திற்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான பங்கை அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். (ஏசாயா 61:6-7)
சகல தேசங்களையும் அசையச்செய்வேன், சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். (ஆகாய் 2:7)
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் யெகோவா சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார். (சகரியா 1:17)
எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிமக்களால் நிறைந்து சுகமாயிருந்த காலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு யெகோவா கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார். (சகரியா 7:7)
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு, மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; (வெளிப்படுத்தின விசேஷம் 6:15-16)
அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 13:16-17)
அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். (வெளிப்படுத்தின விசேஷம் 17:4)
அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான். (வெளிப்படுத்தின விசேஷம் 18:3)
“பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும், எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள். உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை. இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று; ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள். கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று, அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 18:11-19)

செல்வத்தின் எதிர்பார்ப்பு ஊக்கமாகப் பயன்படுத்தப்பட்டது

எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள்” என்றான். சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: “உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்; பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும்” என்றான். (ஆதியாகமம் 34:10-12)
“இந்த மனிதர் நம்முடன் சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் இந்தத் தேசத்தில் குடியிருந்து, இதிலே வியாபாரம் செய்யட்டும்; அவர்களும் குடியிருக்கிறதற்கு தேசம் விசாலமாக இருக்கிறது; அவர்களுடைய மகள்களை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுப்போம். அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள்” என்று சொன்னார்கள். (ஆதியாகமம் 34:21, 23)
அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள். (1 சாமுவேல் 17:25)